பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2018 3:45 AM IST (Updated: 11 Dec 2018 8:45 PM IST)
t-max-icont-min-icon

அழகியபாண்டியபுரம் அருகே பர்னிச்சர் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அழகியபாண்டியபுரம்,

அழகியபாண்டியபுரம் அருகே பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது 40). இவர் அழகியபாண்டியபுரம் சந்திப்பில் பர்னிச்சர் மற்றும் தேன் கடை நடத்தி வருகிறார்.

மேலும் இவர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாவட்ட குழு உறுப்பினராகவும், ம.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

 அரிவாள் வெட்டு

இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அழகியபாண்டியபுரம் பெரியகுளம் பகுதியில் சென்றபோது, எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஏசுதாசை வழி மறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏசுதாஸ் சுதாரிப்பதற்குள், அந்த மர்ம நபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 இதில் படுகாயமடைந்த ஏசுதாசை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏசுதாசின் அண்ணன் மகள் அனிதா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது. மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story