மேகமலை சரணாலய பகுதியில்: மின்சாரம் பாய்ந்து யானை சாவு - தந்தங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது


மேகமலை சரணாலய பகுதியில்: மின்சாரம் பாய்ந்து யானை சாவு - தந்தங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2018 10:00 PM GMT (Updated: 11 Dec 2018 4:50 PM GMT)

மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை இறந்தது. அதன் தந்தங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம்,

மேகமலை வன உயிரின சரணாலயத்தில் சிறுத்தை, புலி, மான், யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி, சிங்கவால் குரங்கு, சிறுத்தைப்பூனை உள்பட 60-க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக, இந்த சரணாலய பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானைகள் இறப்பது வழக்கமாகி விட்டது.

அதன்படி கம்பம் கிழக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வென்னியாறு பகுதியில், சுருளியாறு மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்சார கம்பிகள் உரசியதால் தொடர்ந்து யானைகள் உயிரி ழந்து வருகின்றன. இதுவரை ஒரு குட்டி உள்பட 5 யானைகள் இறந்துள்ளன. சமீபத்தில் 2 யானைகள் உயிரிழந்ததையடுத்து, கடந்த சில தினங்களாக சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத் தப்பட்டது.

இந்தநிலையில் சுருளியாறு மின்நிலையத்தில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வென்னியாறு மேற்கு பகுதியில் உடுப்பியாறு ஓடை அருகே யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் தினேஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், வண்ணாத் திப்பாறை துணை மின் நிலையத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அந்த யானை இறந்திருப்பது தெரியவந்தது. அந்த யானை இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அது, 25 வயதுடைய ஆண் யானை ஆகும். ஆனால் யானையின் உடலில் இருந்து தந்தம் வெட்டி எடுக்கப் பட்டிருந்தது. இதனைக்கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தென்மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தொபா ஷீஸ் ஜானா, மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் கலாநிதி, வன உயிரின சரணாலய உதவி பாதுகாவலர் குகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் யானை தந்தத்தை கடத்தியவர்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

தமிழக-கேரள எல்லையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் கேரள வனத்துறையினரும் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே தமிழக எல்லையான குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியில், சந்தேகப்படும்படியாக கையில் பாலித்தீன் சாக்குடன் 2 பேர் சுற்றித்திரிவதாக கேரள வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குமுளி வனச்சரகர் அனுராஜ் தலைமையிலான வனத்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓடினர். அவர்களை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரித்தனர். விசார ணையில், தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா (வயது 37), பிரபு (34) என்று தெரிய வந்தது.

மேலும் அவர்கள் வைத் திருந்த சாக்குப்பையை வனத் துறையினர் சோதனை செய்தனர். அதற்குள், 10 கிலோ எடை கொண்ட யானை தந்தங்கள் இருந்தன. 2 தந்தங்களை 4 துண்டுகளாக்கி அவர்கள் சாக்குப்பையில் வைத்திருந்தனர். இதனை யடுத்து அவர்களிடம் விசா ரணை நடத்தியதில், கம்பம் அருகே சுருளியாறு மின் நிலையம் அருகே உடுப்பியாறு ஓடை பகுதியில் இறந்து கிடந்த யானையின் உடலில் இருந்து தந்தங்களை வெட்டி எடுத்ததை ஒப்புக்கொண் டனர். அந்த தந்தங்களை குமுளியை சேர்ந்த பாபு என்பவர் மூலம், அங்கு விற்பனை செய்ய அவர்கள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடம் தமிழக வனப்பகுதி என்பதால், மேகமலை வன உயிரின சரணாலய வனத்துறை யினரிடம் அவர்களை கேரள வனத்துறையினர் ஒப்படைத் தனர். இதனையடுத்து கங்கா, பிரபு ஆகியோரை தமிழக வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறந்து கிடந்த யானையின் உடல் இன்று (புதன்கிழமை) பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.


Next Story