சேத்துப்பட்டில்: இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
வாட்ஸ் அப் மூலம் வந்த புகாரால் சேத்துப்பட்டில் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சேத்துப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 27), எலக்ட்ரீசியன். இவருக்கும் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயம் செய்திருந்தனர். அதன்படி சிலம்பரசனின் திருமணம் இன்று (புதன்கிழமை) சேத்துப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.
இதற்காக இருவீட்டாரின் உறவினர்களும் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். பெண் அழைப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மணமகளுக்கு 18 வயது ஆகவில்லை என்று சைல்டு லைனுக்கு, வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊர்நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் திருமணம் நடக்க இருந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாகவும், சான்றிதழ் இல்லையென்றும் கூறினர். ஆனால் 18 வயது ஆகவில்லை என்பது உறுதியாக தெரிந்ததால் மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கி அனுப்பினர்.
இதனால் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story