கடனை திருப்பி கேட்டவரை கொன்ற வழக்கில் முக்கிய நபர் கைது; அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை
கடனை திருப்பி கேட்டவரை கொன்ற வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமபத்ரராஜு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் கருணாமூர்த்தி ( வயது 32). இவர் வெள்ளாத்தூர் காலனியை சேர்ந்த ரவி என்பவரது மகன் அரிபாபு என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.4 லட்சம் கடன் கொடுத்தார். கடனை திருப்பி தரும்படி கேட்ட கருணாமூர்த்தியை அரிபாபுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை செய்து உடலை ஆந்திர மாநிலத்தில் புதைத்தனர்.
இது குறித்து கருணாமூர்த்தியின் தந்தை ராமன் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், சிரஞ்சீவி, வெங்கடேசன், குணசேகரன், பிரதீப், சந்திரபோஸ், ஞானஒளி, சுந்தரம், உமாபதி, நவீன், சரண், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலை மறைவாக இருந்த அரிபாபுவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அரிபாபு ஆந்திர மாநிலம் புத்துரை அடுத்த நாராயணவனம் அருகே வேதாந்தபுரம் கிராமத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த தகவல் அரிபாபுவின் தந்தை ரவிக்கு தெரிய வந்தது. மகன் கைது செய்யப்பட்டதை அவமானமாக கருதிய அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.