சிவகாசியில் இளம்பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற 2 வாலிபர்கள் கைது
சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் 12 பவுன் நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவரது மனைவி சண்முகப்பிரியா (வயது 27). இவர் தனது தங்கை மகாலட்சுமியுடன் நேற்று முன் தினம் இரவு இருசக்கர வாகனத்தில் ரயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து சண்முகப்பிரியா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர்கள் போத்தி, காசியம்மாள், பிரகாஷ் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் நகையை பறித்துக்கொண்டு 2 வாலிபர்கள் தப்பி செல்லும் காட்சி ஒரு அச்சகத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் சிவகாசி காரனேசன் பகுதியில் நேற்று மாலை சிவகாசி டவுன் போலீசார் ரகசிய காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது சண்முகப்பிரியாவிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த ராஜ்குமார் மகன் செல்வகணேஷ் (வயது 22), நாடார் நந்தவன தெருவை சேர்ந்த முருகன் மகன் மதன் (23) என்பது தெரியவந்தது. இதில் செல்வகணேஷ் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 12 பவுன் தாலி செயின் மீட்கப்பட்டது.
சிவகாசி நகரில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முக்கிய பகுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் காணாமல் போனது. இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரிப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே இனி வரும் காலங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தாலிச் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த சிவகாசி டவுன் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.