சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வின் தந்தை கோர்ட்டில் சரண்


சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வின் தந்தை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 12 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வின் தந்தை ஆனந்தன் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன். இவர் கடந்த 1.1.1997 முதல் 7.1.2006 ஆண்டு காலகட்டத்தில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக பணியாற்றினார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புதுவை வந்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஆனந்தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி, அவர்களது மகன் அசோக் ஆனந்த் ஆகிய 3 பேரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்து 221 அளவுக்கு சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2008–ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஆனந்தனின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மீதியுள்ள 2 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 30.10.2018 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் அனந்த், அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்தின் பதவி பறிக்கப்பட்டது. தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் புதுவை கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி விசாரித்து அசோக் ஆனந்துக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை ஆனந்தன் புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் சரண் அடைந்தார். நீதிபதி அவரை சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று இரவு ஆனந்தன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story