சேலத்தில் பரபரப்பு: அரசு வேலை வாங்கி தருவதாக 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி - கள்ளக்குறிச்சியை சேர்ந்தவருக்கு வலைவீச்சு
சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில், நான் சேலத்தில் உள்ள வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கபாகாந்தி என்பவர் அறிமுகம் ஆனார்.
அப்போது அவர் என்னிடம், தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பலரை எனக்கு நன்கு தெரியும் என்றும், அவர்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட வேலை வாங்கி கொடுக்க முடியும் என்றும் நம்பும்படியாக கூறினார்.
அதன்பேரில் நான், எனது மகன், உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்கள் என 20 பேரிடம் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரூ.76 லட்சம் வாங்கி கபாகாந்தியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அரசு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதற்கிடையில் அவர், போலியாக வேலைவாய்ப்பு ஆவணங்களை தயாரித்து எங்களிடம் கொடுத்தார். அதன்பிறகு தான் அவர் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கபாகாந்தியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் என்னை மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்‘ என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து விசாரணை நடத்தினார். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.76 லட்சம் கபாகாந்தி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கபாகாந்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story