மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது


மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 8:19 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 650 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

குழித்துறை,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கடத்தல் சம்பவத்தை தடுக்க வாகனசோதனை மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு என போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்லிங்கம் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜமணி மற்றும் போலீசார் திக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது, அந்த வழியாக 2 சொகுசு கார்கள் வேகமாக வருவதை போலீசார் கண்டனர். உடனே அவர்கள் அந்த கார்களை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். போலீசாரை கண்டதும் டிரைவர்கள் காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒரு டிரைவரை மடக்கி பிடித்தனர். அதற்குள் மற்றொரு டிரைவர் தப்பியோடி விட்டார். பின்னர், 2 கார்களிலும் சோதனை செய்தனர்.

2 கார்களிலும் பிளாஸ்டிக் கேன்களில் 650 லிட்டர் மண்எண்ணெய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், மண்எண்ணெயையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் மார்த்தாண்டம் அருகே உள்ள செருகோல் பகுதியை சேர்ந்த விஜூ என்பதும், கருங்கல் பகுதியில் இருந்து கேரளாவுக்கு மண்எண்ணெயை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விஜூவை கைது செய்தனர்.

Next Story