விவசாய நிலத்தில் காவலுக்கு சென்றபோது காட்டு யானை தாக்கி விவசாயி சாவு உத்தனப்பள்ளி அருகே பரிதாபம்


விவசாய நிலத்தில் காவலுக்கு சென்றபோது காட்டு யானை தாக்கி விவசாயி சாவு உத்தனப்பள்ளி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 13 Dec 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்றபோது காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, தேன்துர்க்கம், சானமாவு, பீர்ஜேபள்ளி, ராமாபுரம், போடூர்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்வது தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதை தடுக்க விவசாயிகள் சிலர் இரவு நேரத்தில் காவலுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள தேன்துர்க்கம் பகுதியை சேர்ந்த விவசாயி சென்னபசவப்பா (வயது 56) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்றுள்ளார். அந்த நேரம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 7 காட்டு யானைகள் அங்கு வந்தன.

அப்போது ஒரு யானை சென்னபசவப்பாவை துரத்தியது. இதைப் பார்த்து அதி ர்ச்சி அடை ந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் யானை விடாமல் துரத்தி சென்று சென்னபசவப்பாவை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த யானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ராகி, அவரை உள்ளிட்ட பயிர்களை தின்று விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

நேற்று காலையில் அந்தவழியாக வந்த சிலர் சென்னபசவப்பா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னபசவப்பாவின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும். காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினரும், போலீசாரும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு சென்னபசவப்பாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த சென்னபசவப்பாவுக்கு உமாதேவி (45) என்ற மனைவியும், கார்த்திக் (27), சஞ்சய் (25) என்ற 2 மகன்களும் உள்ளனர். காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story