அரிமளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


அரிமளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 13 Dec 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் அரிமளம் நகரத்தார்களால் 6-வது முறையாக ராஜகோபுரம் உள்பட அனைத்து மூலஸ்தான விமானங்கள் சீரமைக்கப்பட்டு, புதிய வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் திருப்பணிகள் முடிந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி கடந்த 9-ந் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கியது. விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, முதற்கால யாகபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 2, 3, 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம், ஞானபிரகாச தேசிங்கர், பழனிசாமியாடி அருளாடி அய்யா ஆகியோர் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர். பின்னர் மாலையில் குரு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து விளங்கியம்மன் கோவிலில் இருந்து சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க யாகசாலைக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து 5-ம்கால யாகபூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று 6-ம்கால யாகசாலை பூஜை, லெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் 10.15 கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். அதை தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

தொடர்ந்து சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 10 மணியளவில் பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அரிமளம் நகரத்தார்கள் செய்திருந்தனர். 

Next Story