சேலம் மாநகரில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
சேலம் மாநகரில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை இன்று (வியாழக்கிழமை) மாலையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அதாவது, இன்று காலையில் அவரது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு சேலம் வரும் அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ்நிலையத்தில் ரூ.166.52 கோடியில் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், ரூ.5.10 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.27.23 கோடியில் 3 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் பேசுகிறார். மொத்தம் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். பின்னர் விழாவை முடித்துவிட்டு சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் இரவு தங்குகிறார்.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி வீரகனூரில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.95 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நல உதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
முதல்-அமைச்சர் வருகையால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story