பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 8:15 PM GMT)

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி குன்னியூரில், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை மரங்கள், உயிரிழந்த கால்நடைகளுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அருகே உள்ள குன்னியூர், திருநெய்ப்பேர், வேப்பத்தாங்குடி, பின்னவாசல், திருக்காரவாசல், புதூர், உமாமகேஸ்வரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திரு வாரூர் அருகே உள்ள குன்னியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவா தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இடும்பையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் புலிகேசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story