மீண்டும் புயல் எச்சரிக்கை: தரங்கம்பாடி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை நிவாரணம் வழங்க வலியுறுத்தல்


மீண்டும் புயல் எச்சரிக்கை: தரங்கம்பாடி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 13 Dec 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் புயல் எச்சரிக்கையால் தரங்கம்பாடி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பொறையாறு,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு, குத்தாலம், பூம்புகார் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கஜா புயலால் மீனவர் களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளின் வடு மறையாத நிலையில் மீண்டும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தரங்கம்பாடி, சந்திரப்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களின் வலைகள், படகு என்ஜின்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:- கஜா புயல், மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த பல நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தோம். கஜா புயலுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீன்பிடிக்க சென்றோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு உடனே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story