பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 13 Dec 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

நாகப்பட்டினம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்திற்கு குடிநீர், மின் வசதி மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாகையை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் வட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் இருப்பிட சான்று, வருமான சான்று, சாதி, பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றுகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேதாரண்யத்தில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வட்ட கிளை தலைவர் தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் வழங்கினர். இதில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story