5 மாநில தேர்தல் தோல்வியால் தமிழகத்தில் எந்தக்கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டுசேராது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்ததால் தமிழகத்தில் எந்தக்கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டு சேராது என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு,
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்று ஒரு ஆண்டு முடிவில் 3 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. அவர் கட்சி பதவியை ஏற்றபோது, மோடிக்கு சரிசமமாக இருப்பாரா?, மோடிக்கு நிகராக இருப்பாரா? என்றெல்லாம் சொன்னவர்களுக்கு மத்தியில், இன்றைக்கு மோடியை வீழ்த்தக்கூடிய மிகப்பெரிய சக்தியாக மாறியிருக்கிறார். ஒரு ஆண்டில் பா.ஜ.க.வின் மிகப்பெரிய கோட்டையாக திகழ்ந்தவற்றை, ராகுல்காந்தி தகர்த்து இருக்கிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், காங்கிரசை மிகப்பெரிய வெற்றி அடைய செய்யும் பலம் ராகுல்காந்திக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெறும் என்பது மட்டுமல்ல, ராகுல்காந்தி விரைவில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான நல்ல சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நாங்கள் இந்த தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது வெற்றிகரமான தோல்வி என்று அவர் சொல்கிறார். இது என்ன வெற்றிகரமான தோல்வி என்று எனக்கு புரியவில்லை. தோல்வி என்பதை சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று சப்பைக்கட்டு கட்டுவது, தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஏற்றதல்ல.
கஜாபுயல் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கமிஷன் அடிக்க ஆளும் கட்சியினர் ஆரம்பித்து விட்டார்கள். ஈரோட்டிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் லட்சக்கணக்கான போர்வைகள் விற்பனையாகாமல் முடங்கி கிடக்கின்றன. அவற்றை நிவாரணத்துக்காக வாங்காமல் ஆந்திராவில் இருந்து குறைந்த விலையில், தரம் குறைந்த போர்வைகளை வாங்கி வினியோகித்து கமிஷன் அடித்து இருக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிவித்து இருக்கிறார். இந்த கூட்டணியை பொறுத்தவரை சில செய்திகள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்படுகின்றன. திருமாவளவனுக்கும், வைகோவிற்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், நேற்று அவர்கள் இருவரும் சந்தித்து பேசி விட்டனர். எனவே தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக இருக்கிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்ற விவரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பேசி முடிவு எடுப்பார்கள். பா.ஜ.க.வுக்கு எதிரான தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி மிக வலுவாகவும், மிக பலமாகவும் இருக்கும்.
குட்கா ஊழலில் அமைச்சர் தவறு செய்து இருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு பிடித்து இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அமைச்சரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க. அனாதையாகத்தான் நிற்கும் என்று நான் நினைக்கிறேன். 5 மாநில தேர்தல் தோல்வியால் தமிழகத்தில் உள்ள எந்தக்கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டுசேர வாய்ப்பில்லை. அ.தி.மு.க.வோ, தினகரன் கட்சியோ யாரும் நெருப்பை தங்கள் தலையில் கொட்டிக்கொள்ள மாட்டார்கள். விவசாயிகளுக்கு பாதகமில்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கிவிட்டு ஊர், ஊராக சென்றுகொண்டு இருக்கிறார். ரஜினியை பொறுத்தவரை அவரது படம் வெளிவரும் முன்பு ஏதாவது ‘ஸ்டண்ட்’ அடிக்க வேண்டும் என்பதற்காக 90 சதவீதம், 95 சதவீதம் கட்சி தொடங்கும் பணி முடிந்தது என்று கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கையும் இல்லை. அவர் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருக்கலாம். பா.ஜ.க.வின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான் ரஜினிக்கு நான் சொல்லும் அறிவுரை. 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சி பலம் இழக்கிறது என்று ரஜினி கூறிஉள்ளதை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
அதன்பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘‘தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். வெற்றியை கொண்டாடும் நேரத்தில் சில தேவையில்லாத விஷயங்களை பேச விருப்பமில்லை’’, என்றார்.
இந்த பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், துணைத்தலைவர் ராஜேஷ்ராஜப்பா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாட்ஷா, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.