விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது எப்போது? பிளஸ்-2 மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு


விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது எப்போது? பிளஸ்-2 மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:30 PM GMT (Updated: 12 Dec 2018 9:43 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது எப்போது? என பிளஸ்-2 மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருச்சி,

மறைந்த ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல்- அமைச்சராக இருந்த போது பள்ளிக்கல்வி துறையில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. மாணவ- மாணவிகளும் தங்களது படிப்பு மற்றும் உயர்கல்விக்கு மடிக்கணினியை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி திறந்த ஒரு சில மாதங்களிலேயே விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு விடும்.

இந்த நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது தாமதமாகி வருகிறது. விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது எப்போது? என திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை வட்டாரத்தில் விசாரித்த போது அதிகாரிகள் கூறுகையில், “விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது அரசின் திட்டம். எப்போது வழங்கப்படும் என்பதை அரசு தான் அறிவிக்கும். அரசு அறிவித்த பின்பு தான் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இந்த கல்வி ஆண்டில் அவர்களுக்கும் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரம் ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டன” என்றனர். பள்ளி திறந்து வகுப்புகள் தொடங்கி அரையாண்டு தேர்வு தொடங்கி நடந்து வருகிற நிலையில் இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாதது மாணவ-மாணவிகளை வருத்தமடைய செய்துள்ளது. விலையில்லா மடிக்கணினியை விரைவில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story