சீட்டு நடத்தி ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி தம்பதிக்கு வலைவீச்சு
சீட்டு நடத்தி ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.5லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யகுமார் என்கிற சூசைமரிய நாதன்(வயது 48). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி உஷா ராணி(45). ஜிப்மர் ஊழியரான இவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர்களிடம் லப்போர்த் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமி ஜோசப்(60) ரூ.2லட்சம் மதிப்பிலான 3 குலுக்கல் சீட்டுகள் கட்டியுள்ளார்.
சீட்டு முடிந்த நிலையில் கழிப்பு தொகை போக மீதி ரூ.5லட்சத்து 10 ஆயிரத்தை உஷா ராணி அவருக்கு கொடுக்கவில்லை. எனவே சாமி ஜோசப் அவரை பலமுறை சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளார். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உஷாராணி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே சூசைமரிய நாதனும், உஷா ராணியும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.