எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மேகதாது அணை பிரச்சினை குறித்து தீர்மானம்: நாளை, புதுவை சட்டசபை சிறப்பு கூட்டம்


எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மேகதாது அணை பிரச்சினை குறித்து தீர்மானம்: நாளை, புதுவை சட்டசபை சிறப்பு கூட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2018 12:03 AM GMT (Updated: 13 Dec 2018 12:03 AM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை நடக்கிறது.

புதுச்சேரி,

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சமீபத்தில் தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தது. அப்போது கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் தீர்மானம் நிறைவேற்ற புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வலியுறுத்தின. அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சபாநாயகர் அலுவலகத்திலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கிடையே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடாமல் உள்ளது குறித்து விவாதிக்கக்கோரி ஒத்திவைப்பு பிரேரணையை அ.தி.மு.க. கொடுத்துள்ளது. கூட்டம் ஆரம்பித்ததும் இதுதொடர்பாக விவாதிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் புதுவை சட்டசபையில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை வைக்கும்போது பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பினை தெரிவிப்பார்கள். இதனால் அவையில் விவாதம் சூடுபறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story