பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 14 Dec 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி,

தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், உற்பத்திக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டுமில்லாமல் டாஸ்மாக் பார்களையும் பூந்தமல்லி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஓட்டல்கள், துணிக்கடைகள், மளிகை கடைகள், டாஸ்மாக் பார் என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு ஒவ்வொரு கடைகளுக்கும் ரூ.1000, முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்டுகளை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். மேலும் துணிப்பை என கலப்படமான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார்களா? என்பதை அந்த பைகளை தீ வைத்து எரித்து பார்த்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் துணி பை கொண்டு வரும்படி அறிவுறுத்தினார்.

இதையடுத்து பிளாஸ்டிக் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நகராட்சி கமிஷனர் டிட்டோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி பூந்தமல்லி பஸ் நிலையத்தில் தொடங்கி பூந்தமல்லி நகராட்சியில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Next Story