ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவிலில் இருந்து புத்துணர்வு முகாமிற்கு, 2 யானைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன


ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவிலில் இருந்து புத்துணர்வு முகாமிற்கு, 2 யானைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை கோவிலில் இருந்து புத்துணர்வு முகாமிற்கு 2 யானைகள் நேற்று லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

திருச்சி,

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மடங்களுக்கு சொந்தமான கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோவிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 48 நாட்கள் முகாம் நடக்கும்.

இந்த புத்துணர்வு முகாமிற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருச்சி இணை ஆணையர் மண்டலத்தில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் யானை ஆண்டாள், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமி ஆகிய 2 யானைகள் நேற்று காலை புறப்பட்டன.

முன்னதாக இந்த 2 யானைகளும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் இந்து சமய அறநிலையத்துறை பழைய இணை ஆணையர் அலுவலகத்துக்கு லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், மலைக்கோட்டை கோவில் இணை ஆணையர் விஜயராணி ஆகியோர் ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகளையும் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். ஆண்டு தோறும் புத்துணர்வு முகாமிற்கு யானைகள் செல்வதால், அடம் எதுவும் செய்யாமல் சாந்தமாக லாரிகளில் யானைகள் ஏறிக்கொண்டன.

இந்த யானைகளுடன் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றனர். தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் காலை, மாலை என தினமும் யானைகளுக்கு நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் கோவில் களில் தினமும் நடக்கும் பூஜை மற்றும் திருவிழாக்களில் யானைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 48 நாட்கள் அந்த யானைகளுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இயற்கையான எழில் சூழ்ந்த வனப்பகுதியில் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாம் யானைகளின் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்த நிலையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில் யானை அகிலா இந்த புத்துணர்வு முகாமிற்கு நேற்று செல்ல வில்லை. ஏனென்றால், கோவிலில் கடந்த 9-ந் தேதி, 12-ந் தேதி என 2 கட்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, 2 நாட்கள் கழித்து யானை அகிலாவை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story