கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:00 AM IST (Updated: 14 Dec 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6-ந் தேதி காத்திருப்பு பேராட்டம், 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 10, 11, 12-ந் தேதிகளில் மக்களை தேடி உரிமை போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில் உரிமை தேடி நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்குமார் பேசினார். வட்ட செயலாளர் முத்துராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் மாவட்ட துணை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்ட மாறுதலை ஒரே சமயத்தில் தமிழகம் முழுவதும் நடத்திட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களில் 50 சதவீதம் பெண்கள் இருப்பதால், அவர்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்திற்கு வாடகை வழங்க வேண்டும். கணினி சான்றுகள் வழங்க இதுவரை செய்த செலவினத்தொகையை உடனே வழங்கிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். புதிய கிராம நிர்வாகத்துறையை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Article-Inline-AD


Next Story