கன்னியாகுமரி நினைவு மண்டபத்தில் கூடுதலாக காந்தியின் அரிய புகைப்படங்கள் சுற்றுலா பயணிகள் வரவேற்பு


கன்னியாகுமரி நினைவு மண்டபத்தில் கூடுதலாக காந்தியின் அரிய புகைப்படங்கள் சுற்றுலா பயணிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி நினைவு மண்டபத்தில் கூடுதலாக காந்தியின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி,

மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி டெல்லியில் பிரார்த்தனை கூட்டத்துக்கு சென்ற போது, கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அவரது அஸ்தி பல்வேறு கலசங்களில் சேகரிக்கப்பட்டு ஆறு, கடல் போன்றவற்றில் கரைக்கப்பட்டது. இதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

முன்னதாக அவரது அஸ்தி கலசம் கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் கடற்கரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அதே இடத்தில் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.

இந்த மண்டபத்தின் முன்பகுதியை பார்த்தால் கிறிஸ்தவ ஆலயம் போலவும், உள் பகுதி இந்து ஆலயம் போலவும், அஸ்தி கட்டம் உள்ள பகுதி பள்ளிவாசல் போன்றும் வடிவமைக்கப்பட்டு 3 மதத்தின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.

காந்தி அஸ்தி கட்டத்தின் மீது ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந் தேதி அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். இதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள்.

இந்த மண்டபத்தில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஏற்கனவே 12 அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் இந்த மண்டபத்தில் மேலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அரிய 60 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

காந்தியின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் சம்பந்தமான படங்கள், முகமது அலி ஜின்னா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், அன்னிபெசன்ட் அம்மையார், மவுண்ட் பேட்டன் பிரபு மற்றும் அவரது துணைவியார் ஆகியோருடன் காந்தி இருக்கும் படம், காமராஜர், நேரு, வல்லபாய் பட்டேல், இந்திராகாந்தி, நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் உள்பட பல்வேறு தலைவர்களுடன் காந்தி அடிகள் இருக்கும் அரிய புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் பயன்படுத்திய கண்ணாடி, செருப்பு, கைத்தடி, அவரது இறுதி ஊர்வல படமும் உள்ளன. குமரி மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு துறை இந்த அரிய புகைப்படங்களை சேகரித்து மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆர்வமுடன் காந்தி அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தனர்.

Next Story