வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தற்கொலை
வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருபுவனை,
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த பங்கனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரூப்குமார் (வயது 46). டாக்டரான இவர் வில்லியனூர் அருகே அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளாக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி உஷாராணி திருப்பதியில் அரசு அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் ரூப்குமாரின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உதவி பேராசிரியர் ஜேம்ஸ் ராஜேஷ், விடுதி உதவியாளருடன் அறை கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரூப்குமார் மின் விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி, உதவி சப்–இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் ரூப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.