அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் ரூ.2 கோடியே 93½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்


அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் ரூ.2 கோடியே 93½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:00 PM GMT (Updated: 13 Dec 2018 9:53 PM GMT)

திருச்சியில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில், ரூ.2 கோடியே 93½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

திருச்சி,

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை அருகே உள்ள மைதானத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்து, 650 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 93 லட்சத்து 55 ஆயிரத்து 229 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், “ஸ்ரீரங்கத்தில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் சுற்றுலா காட்சி விளக்க மையம் மேம்பாட்டு பணிகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4ஆண்டுகளாக இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் உலக அளவில் 105 கோடி பேர் சுற்றுலா மேற்கொள்கிறார்கள். 2020-ம் ஆண்டில் இது 156 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. உலக சுற்றுலா நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பேசினார்.

விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, செல்வராஜ் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருட்காட்சியில் திருச்சி மாநகராட்சி, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்களை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் ஏராளமான துப்பாக்கிகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன.

Next Story