வீட்டில் இருந்தபடியே போலீஸ் நற்சான்றை இணையதளத்தில் பெறலாம்
தமிழகத்தில் வீட்டில் இருந்தபடியே போலீஸ் நற்சான்றை இணையதளத்தில் பெறும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
திண்டுக்கல்,
தமிழ்நாடு போலீஸ் துறை நவீனமயமாகி வருகிறது. போலீஸ் நிலையங் களுக்கு செல்லாமலே இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். மேலும் முதல் தகவல் அறிக்கை, காணாமல் போனவர் களின் விவரங்களை பார்த்தல், விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுதல், தவற விட்ட ஆவணங்கள் குறித்து புகார் அளித்தல் உள்ளிட்ட சேவைகளும் இணையதளத்தில் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே போலீஸ் துறை சார்பில் வழங்கப்படும் நற்சான்றும், இனிமேல் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி வர இருக்கிறது. சில தனியார் துறையில் வேலையில் சேரும் போது போலீஸ் நற்சான்று அவசியம் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதிலும் சமீபகாலமாக வாடகைக்கு வீடு கொடுப்பதற்கும், வீட்டுக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கும் போலீஸ் நற்சான்று கேட்பது வழக்கமாகி விட்டது.
முன்பு போலீஸ் நற்சான்றை பெறுவதற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். சான்றை பெறும் வரை போலீஸ் நிலையத்துக்கு அலைய வேண்டும். இதை தவிர்க்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் போலீஸ் இணையதளத்தில் புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்காக www.eservices.tnpolice.gov.in எனும் இணையதளத்தின் மூலம் போலீஸ் நற்சான்று பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தனிநபர் எனில் ரூ.500-ம், தனியார் நிறுவனங்கள் எனில் ரூ.1,000-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் புகைப்படம் மற்றும் மத்திய, மாநில அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையடுத்து 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு நற்சான்று அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே நற்சான்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை இன்னும் ஒருசில நாட்களில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இதுதொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்தல், நற்சான்று தயாரித்தல் குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story