புனேயில் கார் மோதியதில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆட்டோ தீப்பிடித்தது


புனேயில் கார் மோதியதில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆட்டோ தீப்பிடித்தது
x
தினத்தந்தி 14 Dec 2018 5:03 AM IST (Updated: 14 Dec 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் கார் மோதியதில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆட்டோ தீப்பிடித்தது. இதில், தீக்காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புனே, 

புனே பிப்பேவாடி பகுதியில் உள்ள சாலையில் நேற்றுமுன்தினம் மாலை ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அங்குள்ள பாரதி ஜோதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் ஆட்டோவின் சி.என்.ஜி. கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து, ஆட்டோ தீப்பிடித்துக் கொண்டது.

தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பற்றி எரிந்தது. இதில் தீக்காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் சாலையில் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சசூன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஆட்டோவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

போலீஸ் விசாரணையில், ஆட்டோ டிரைவர் பெயர் கிஷோர் கோகுல் நர்கே(வயது27) என்பது தெரியவந்தது. அவர் 20 சதவீத தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story