வேலூர் கோர்ட்டு அருகே மனநிலை பாதித்தவர் மரத்தில் ஏறி மின்கம்பியில் தொங்கி தற்கொலை முயற்சி ஊழியர்கள் கயிறுகட்டி இறக்கினர்


வேலூர் கோர்ட்டு அருகே மனநிலை பாதித்தவர் மரத்தில் ஏறி மின்கம்பியில் தொங்கி தற்கொலை முயற்சி ஊழியர்கள் கயிறுகட்டி இறக்கினர்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:00 AM IST (Updated: 14 Dec 2018 7:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோர்ட்டு அருகே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மரத்தில் ஏறி மின்கம்பியில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர்தப்பினார் அவரை மின் ஊழியர்கள் கயிறு கட்டி கீழே இறக்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. கோர்ட்டு அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் நேற்று பகலில் பழைய கோர்ட்டு கட்டிடத்தின் நுழைவு வாயில் அருகில் உள்ள ஆலமரத்தின் மீது முதியவர் ஒருவர் ஏறி நின்றார். அவருடைய தலைக்கு அருகில் மின்சார கம்பி சென்றது.

அந்த மின்கம்பியை பிடிக்க அவர் முயற்சி செய்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் அங்கு கூடத்தொடங்கினர். மரத்தில் ஏறிநின்ற அவர் கீழே குதிக்கப்போவதாகவும் கூறி உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் மற்றும் மின் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். மரத்தில் நின்ற நபரின் அருகிலேயே மின் கம்பி சென்றதால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட கம்பியைபிடித்து அவர் தொங்கினார். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

பின்னர் மரத்தில் நின்ற நபருடன் பேசி அவரை கீழே இறங்கும்படி போலீசார் வலியுறுத்தினர். அதற்கு கீழே இறங்க மறுத்த அவர், ரூ.2 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று பேசத்தொடங்கினார். அதைத்தொடர்ந்து மின் ஊழியர்கள் மரத்தில் ஏறி அவரை கயிற்றால் கட்டி கீழே இறக்கினர். அந்த நபர் அழுக்கு உடையுடன் இருந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாகவும், வேடிக்கை பார்த்தவர்களை ஆபாசமாகவும் பேசினார். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனால் அவருடைய பெயரைக்கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. அங்கேயே சுற்றி சுற்றி வந்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story