தி.மு.க.வில் சேர்ந்தவுடன் செந்தில்பாலாஜி நன்றி மறந்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி பேட்டி


தி.மு.க.வில் சேர்ந்தவுடன் செந்தில்பாலாஜி நன்றி மறந்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2018 11:00 PM GMT (Updated: 14 Dec 2018 5:25 PM GMT)

‘தி.மு.க.வில் சேர்ந்தவுடன் செந்தில்பாலாஜி நன்றி மறந்து பேசுகிறார்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

சேலம் மாவட்டம் வீரகனூரில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது வழிநெடுகிலும் மக்கள் எழுச்சியாக வரவேற்பு கொடுத்தார்கள். வீரகனூரில் நடந்த விழாவில் மட்டும் 27 ஆயிரத்து 92 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

கேள்வி:- அடுத்து ஒரு புயல் வலுவாக இருக்கும் என்று சொல்கிறார்கள்? அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- தற்பொழுது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளபடி எந்த சேதாரமும் ஏற்படாது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.


கேள்வி:- அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறீர்கள். அதுபற்றி?

பதில்:- அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் இந்த அணை பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள். இந்த அணை பாதுகாப்பு சட்டத்தினால் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற விவரத்தை மத்திய அரசிற்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

கேள்வி:- மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

பதில்:- நம்பிக்கையின் அடிப்படையில் தான் செய்கிறோம். நம்முடைய உரிமையை மீட்பதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறது.

கேள்வி:- தமிழகம் சார்பாக பல கோரிக்கைகளை நீங்கள் வைத்துக் கொண்டே வருகிறீர்கள். ஆனால் மத்திய அரசு நிறைவேற்ற மறுக்கிறதே?

பதில்:- தமிழ்நாட்டு மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுடைய உரிமையைப் பெறுவதற்கு, மத்திய அரசிற்கு தேவையான அழுத்தத்தை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:- மேகதாது அணை கட்டுவது குறித்து?

பதில்:- ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. எந்த ஒரு அணை கட்டவேண்டுமானாலும், அந்த மாநிலத்திற்கு கீழ் உள்ள மாநிலத்தின் இசைவு பெறாமல் எந்தவித கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளித்தபடிதான் அனைத்து மாநிலங்களும் நடந்து கொள்ள வேண்டுமென்று இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி:- தண்ணீர் பிரச்சினையில் அனைத்து மாநிலங்களும் நம்மை வஞ்சித்து கொண்டே இருக்கிறார்களே?

பதில்:- இன்றைக்கு மட்டுமல்ல, 50 ஆண்டுகாலமாக வஞ்சித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாம் சட்டப் போராட்டம் நடத்திதான் தீர்ப்பை பெறவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

கேள்வி:- தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். 700 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்தது என்றும், அவர் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாகவும் கூறியிருக்கிறாரே?

பதில்:- அவர் நீதிமன்றத்துக்கு போகட்டும். அ.தி.மு.க. ஆட்சி கவிழும், கட்சி உடையும் என்று பார்த்தார்கள். அது ஒன்றும் நடக்கவில்லை. ஊழல் செய்திருக்கிறார்கள், அதனால் நீதிமன்றத்திற்கு போகிறோம் என்று இன்றைக்கு புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே, என்மீது வழக்கு போட்டார்கள். ஆனால் அது உச்சநீதிமன்றத்தில் தடையாகி போய்விட்டது. வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது குற்றம் சுமத்துவதற்காக பொய் பிரசாரத்தை இப்பொழுது முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஒன்றும் எடுபடாது. அரசைப் பொறுத்தவரை, ஒப்பந்தப்புள்ளி திறந்தவெளி ஒப்பந்தம். யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். தகுதியானவர்களுக்குத்தான் ஒப்பந்தம் கிடைக்கும்.

தி.மு.க. ஆட்சியில் எப்படி டெண்டர் விட்டார்களோ? அதே முறைதான் பின்பற்றப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது, எந்த அடிப்படையில் ஒப்பந்தம் விட்டாரோ, அதே அடிப்படையில்தான் இப்பொழுதும் ஒப்பந்தம் விடப்படுகிறது. இதில் எப்படி முறைகேடு நடக்கும்? முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமென்றே இந்த ஆட்சி மீது பழி சுமத்த வேண்டும், குற்றம் சுமத்த வேண்டும் என்று பொய் பிரசாரத்தை மக்களிடத்தில் பரப்பி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் அ.தி.மு.க. அரசுக்கு நற்பெயர் வந்து கொண்டிருக்கின்றது. அதற்கு களங்கம் கற்பிக்கின்ற விதத்தில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க.வின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கிறது. ஒருவரைத் தவிர என்று சொல்லியிருக்கிறீர்கள். இருந்தபொழுதும் அவர்கள் மாற்று கட்சிக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். அங்கு பலபேர் போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறதே?

பதில்:- யார் மாற்றுக் கட்சிகளுக்கு போனார்கள்?. சில சுயநல சக்திகள் போகிறது. உண்மையான தொண்டர்கள் யாரும் போகவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது பலனை அனுபவித்தவர்கள், இந்த இயக்கத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு வெளியிலே செல்கிறார்கள். உண்மையான விசுவாசிகள், உழைக்கின்ற தொண்டர்கள் நிறைந்திருக்கின்ற கட்சி அ.தி.மு.க.

கேள்வி:- அ.தி.மு.க. ஒரு மூழ்கும் கப்பல் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லியிருக்கிறாரே?

பதில்:- வேடிக்கையாக இருக்கிறது. அவர் 1996-ம் ஆண்டில் தி.மு.க.வில் இருந்தவர். கவுன்சிலருக்கு போட்டியிட்டவர். அப்பொழுது அந்த எண்ணம் தான் இருக்கும். இதுவரையில் அ.தி.மு.க.வில் இருந்து பலனை அனுபவித்தார். அ.தி.மு.க.வினால் தான் நாட்டிற்கு இந்த பாலாஜி யார்? என அடையாளம் காட்டப்பட்டார். இந்த கட்சியில் இருந்ததால் தான், அவருக்கு சீட் கிடைத்து, எம்.எல்.ஏ ஆகி அதன்பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சராக உயர்ந்த பொறுப்புக்கு வந்தார். அவர் நன்றி மறந்து பேசுகிறார். அ.தி.மு.க.மீது செந்தில்பாலாஜி குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story