கணினி உதிரிபாகங்களை விற்பனை செய்யலாம் என்று கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை
கணினி உதிரிபாகங்களை விற்பனை செய்யலாம் என்று கூறி ரூ.1 கோடி பெற்று மோசடி செய்த வருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ஜவஹர்லால் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவர் கோவை அவினாசி ரோட்டை சேர்ந்த குருபிரசாத் மற்றும் அவருடைய மனைவியிடம் கணினி உதிரிபாகங்களை வாங்கி விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என்றும், அதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லாததால் நீங்கள் பணம் கொடுங்கள் என்று கூறினார்.
அதை நம்பிய அவர்கள் கடந்த 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் 7–ந் தேதி முதல் 2010–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4–ந் தேதி வரை ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்து உள்ளனர். ஆனால் அந்த பணத்தையும், அதன் மூலம் கிடைத்த ரூ.27½ லட்சம் லாபத்தை சுரேஷ்குமார், குருபிரசாத் தம்பதிக்கு கொடுக்கவில்லை.
இந்த மோசடி குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வேலுசாமி, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்தை 3 மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் மாஜிஸ்திரேட்டு கூறிய தீர்ப்பில், சுரேஷ்குமார், குருபிரசாத்தை தவிர மற்ற சில நபரையும் ஏமாற்றி உள்ளார். இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றும் நபர்களுக்கு மிக அதிகப்படியான சிறை தண்டனையும், ஏமாற்றிய தொகையை நஷ்டஈடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டால் தான் இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கும், மற்றவர்களுக்கு பாடமாகவும் அமையும் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச சிறை தண்டனையும், நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரேவதி ஆஜராகி வாதாடினார்.