புயலால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு


புயலால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 14 Dec 2018 11:15 PM GMT (Updated: 14 Dec 2018 9:37 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்,

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாவட்ட தலைவர் அழகர்ராஜா தலைமையில், மாநில செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கஜா புயலுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்வது. 2017-18-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை கால தாமதமின்றி விவசாயிகளுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். கஜா புயலால் 50 சதவீதத்திற்கு மேல் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரண தொகை வழங்க வேண்டும்.

கஜா புயலால் சேதம் அடைந்த தென்னை, வாழை, எலுமிச்சை மற்றும் புளிய மரம் உள்பட அனைத்து மரங்கள், அனைத்து வீடுகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரண தொகை வழங்க வேண்டும். கஜா புயலினால் சேதம் அடைந்த பள்ளி கட்டிடங்கள், சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலக கட்டிடங் களிலும் உடனடியாக பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

கஜா புயலினால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறைகளுக்கு சொந்தமான வாய்க்கால்கள், குடிமராமத்து பணிகளை முன்கூட்டியே ஏப்ரல் மாதம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



Next Story