முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 24–வது வார்டு அப்பாச்சிநகர், முத்துநகர், மேட்டாங்காடு, செங்காடு, என்.ஆர்.கே.புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. வாரம் ஒருமுறை என்று வந்து கொண்டிருந்த குடிநீர், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வினியோகிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தெருகுழாய் மூலம் வினியோகித்து வந்த குடிநீரை, பல்வேறு காரணங்களை கூறி நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை காலிக்குடங்களுடன் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. குடிநீரை விலைக்கு வாங்கி நாங்கள் உபயோகப்படுத்தி வருகிறோம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 20 நிமிடங்கள் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.