மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 6 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 6 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:57 PM GMT (Updated: 14 Dec 2018 10:57 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளவயது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன்காரணமாக அந்த பெண்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இளவயது திருமணங்களை தடுக்க சைல்டு லைன் அமைப்பு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில், நேற்று முகூர்த்த தினம் என்பதால் மாவட்டம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதற்கிடையே, நேற்று காலை திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டியில் 11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக 1098 என்ற ‘சைல்டு லைன்’ அமைப்பின் இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் வந்தது. உடனே, அவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியின் வீட்டுக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அவருடைய பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். உடனே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்று மாணவியின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர். இதேபோல, ஆத்தூரை அடுத்துள்ள கதிர்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும், 36 வயதுடைய ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்தனர். பின்னர் பெண்ணின் பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதேபோன்று, குள்ளனம்பட்டியை சேர்ந்த 15 வயது பெண், காமலாபுரத்தில் 17 வயது பெண், எரியோட்டில் 16 வயது பெண், பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஆகியோருக்கு நேற்று நடைபெற இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

ஒரே நாளில் 6 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story