பட்டாசு ஆலை பிரச்சினையை தீர்க்கக்கோரி விருதுநகரில் பெரிய அளவில் போராட்டம் உரிமையாளர்கள் முடிவு
பட்டாசு ஆலை பிரச்சினையை தீர்க்கக்கோரி விருதுநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த தொழிலை நம்பி இருந்த ஏராளமான மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:–
பட்டாசு ஆலை பிரச்சினையை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். வருகிற செவ்வாய்க்கிழமை முதல்– அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்கலாம். பிரதமரிடம் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துக்கூறி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.“ என்றார். கூட்டத்தில் டான்பாமா தலைவர் ஆசைத்தம்பி, பொதுச்செயலாளர் மாரியப்பன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டான்பாமா நிர்வாகிகள் பேசுகையில், பட்டாசு ஆலை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி அடுத்த வாரம் விருதுநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.