முதல்– அமைச்சர்களை மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான் - நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில முதல்–அமைச்சர்களை மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி முதல்–அமைச்சர் நாராயணசாமி அரசினர் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இறுதியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மேகதாது அணை பிரச்சினை மாநிலத்தின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை. காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 7 டி.எம்.சி. தண்ணீர் காரைக்காலுக்கு தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் நாம் விவசாயிகளுக்காக போராடும் காலகட்டத்தில் உள்ளோம். மேகதாது தமிழக எல்லை பகுதியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ரூ.6 ஆயிரம் கோடியில் அணை கட்டப்பட உள்ளது. அந்த அணை 99 மீட்டர் உயரம், 674 மீட்டர் நீளத்துடன் 60 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டப்பட உள்ளது.
அதில் 4.75 டி.எம்.சி. தண்ணீரை பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளனர். மேலும் எந்தவித நீர்ப்பாசன திட்டங்களும் மேற்கொள்ளப்படாது என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த தண்ணீரை சேமித்து ராம்நகர் மாவட்டத்தில் விவசாயத்துக்குத்தான் பயன்படுத்தப்போகின்றனர்.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே ஏதேனும் பணிகளை மேற்கொண்டால் காவிரி பாயும் மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு செய்யாதது கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. இந்த விஷயத்தில் 2 சிக்கல்கள் உள்ளது.
அதாவது காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராகவும், நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் மசூத் உசேன்தான் உள்ளார். அவர்தான் அனுமதி அளித்துவிட்டு காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் நமது மாநிலத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது ஆணையத்தை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி கொடுத்தது தவறு என்று கூறுகிறார். காவிரிமேலாண்மை வாரியம், நீர்வள ஆணையத்துக்கு தனித்தனி தலைவர்களை மத்திய அரசு நியமிக்கவேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் மத்திய, கர்நாடக அரசுகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம். இதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அதை மீறி கோர்ட்டுக்கு செல்வோம். கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி இருந்தபோதும் காவிரி பிரச்சினையில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இணைந்துதான் செயல்பட்டனர். நமது மக்களுக்காக பாடுபடுவது நமது கடமை.
மாநில பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க நான் நேரம் கேட்டால் அவர் நேரம் ஒதுக்கித்தர மறுக்கிறார். முதல்–அமைச்சர்களுக்கு நேரம் ஒதுக்கி தராத ஒரே பிரதமர் மோடிதான். முதல்–அமைச்சர்களுக்கு மரியாதை இல்லாமல் போனது இந்த ஆட்சியில்தான். எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பிரச்சினைகளையாவது காது கொடுத்து கேட்கலாமே. எந்த நேரமும் வெளிநாட்டில் இருந்தால் எப்படி? காவிரி பிரச்சினைக்காக நாம் வேறுபாடின்றி ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.