ஆரணியில் விநாயகர் கோவிலில் திருட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கைது


ஆரணியில் விநாயகர் கோவிலில் திருட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 4:15 AM IST (Updated: 15 Dec 2018 9:26 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆரணி,

ஆரணி பாட்ஷா தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கோவில் ஊழியர் பாபு என்பவர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் பாபு கோவிலுக்கு வந்த போது, கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜமீஷ்பாபு மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பையூர் ஆற்றங்கரை அருகே ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், பையூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 28) என்பதும், பாட்ஷா தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் திருடியதும் தெரியவந்தது.

மேலும் அவர், ஆரணி, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ரஞ்சித்தை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story