ஸ்டெர்லைட்டை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:-
கேள்வி:-ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதே?
பதில்:-ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து அந்த ஆலையின் உரிமையாளர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்.
கேள்வி:-மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றாரே?
பதில்:-நான் ஏற்கனவே, ஊடகம், பத்திரிகைகள் வாயிலாக பலமுறை தெளிவாக தெரிவித்திருக்கிறேன். 50 ஆண்டு காலமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய காவிரிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, அண்மையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பை, காவிரிப்படுகையில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பின்பற்ற வேண்டுமென்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு.
கேள்வி:-சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்திருக் கிறதே?
பதில்:-நிராகரிக்கவில்லை, தவறான தகவல். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதற்குத் தேவையான விளக்கம் கேட்டு, அதன்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்கும்.
கேள்வி:-எதிர்கால நலன் கருதி 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருக்கின்றீர்கள்? ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களே?
பதில்:-இந்தியாவின் இரண்டாவது பசுமைவழிச் சாலை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது, ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதி, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நிலம் கையகப்படுத்தும்பொழுது, குறைந்த அளவில் இழப்பீட்டுத் தொகை கொடுத்தார்கள். ஆனால், இப்பொழுது அப்படியல்ல, விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதால், சாலை, உட் கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியம். வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பே, 8 வழிச்சாலை, 10 வழிச்சாலை என்று ஏற்படுத்தி, தொழில் வளம் பெருகி, சிறப்பான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை தமிழகத்திலும் அமைய வேண்டுமென்றுதான் தமிழ்நாடு அரசு விரும்புகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். யாரையும் பாதிப்பிற்கு உள்ளாக்குவது நோக்கமல்ல. ஆனால், மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை.
கேள்வி:-ஏற்கனவே 4 வழிச்சாலையிலேயே எங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்களே?
பதில்:-அது தவறானது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. இது இன்று, நேற்றல்ல, ஏற்கனவே, தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நில எடுப்பு, அப்பொழுது ஒவ்வொருவரும் ஒரு வழக்கு போட்டார்கள், நிலத்தின் வழிகாட்டு மதிப்பிற்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகை கேட்டு நடைபெற்ற சம்பவம் அது. தற்பொழுது அப்படியல்ல, 8 வழிச்சாலையை பொறுத்தவரையில் அரசாங்கம் நிலத்திற்குத் தேவையான அனைத்து இழப்பீட்டுத் தொகையையும் வழங்கவிருக்கிறது. தென்னை, மாமரம், வீடு, நிலம் ஆகியவற்றிற்கு இழப்பீடு தருகிறோம். அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டால், வீடு கட்டுவதற்கு நிலம் கொடுத்து, அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்கிறது. இதற்கு 89 சதவீத மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றார்கள், 11 சதவீதம் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஒரு திட்டம் என்று வரும்பொழுது ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தித் தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story