ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை, தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை, தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 7:06 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான கிடங்கில் இருந்து ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணியை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 7 ஆயிரத்து 500 மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். கூடுதலாக 2 ஆயிரம் மின் ஊழியர்கள் வர உள்ளனர். புயல் காரணமாக மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 75 ஆயிரம் இணைப்புகளுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இணைப்புகளுக்கு இன்னும் 3 அல்லது 4 நாட்களில் மின் வினியோகம் செய்யப்படும்.

கணக்கெடுப்பின்படி இதுவரை முழுமை மற்றும் பகுதியாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 821 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 47 ஆயிரத்து 5 குடும்பங்களுக்கு ரூ.22 கோடி நிவாரணத்தை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளோம்.

புயலில் விழுந்த அனைத்து விதமான மரங்களையும் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. ஒருவர் கூட விடுபடாமல் அனைவருக்கும் நிவாரணம் சென்றடையும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிப்பதில்லை என்பது தான் அரசின் கொள்கை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

தற்போது அதனை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும். மேல்முறையீடு செய்வதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் குணசீலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story