வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் முன்னாள் பேரூராட்சி தலைவியின் கணவர் கைது


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் முன்னாள் பேரூராட்சி தலைவியின் கணவர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 4:15 AM IST (Updated: 16 Dec 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அத்திக்கடை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் காமராஜ்(வயது40). இவர் குடவாசல் முன்னாள் பேரூராட்சி தலைவி வாசுகியின் கணவர் ஆவார். இவர் தினமும் காரைக்காலில் இருந்து புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து இப்பகுதியில் விற்பனை செய்து வருவதாக குடவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் நேற்று மஞ்சக்குடி மதகடியில் ஒருவர் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அத்திக்கடையில் காமராஜிடம் மது வாங்கியதாக கூறினார். அதன் பேரில் போலீசார் காமராஜின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் வீட்டின் உள்ளே ஒரு சாக்கு மூட்டையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் காமராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது உறவினர் வீட்டில் நடைபெற உள்ள விருந்துக்காக மதுபாட்டில்களை வாங்கி வைத்திருப்பதாக கூறினார். ஆனால் அவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 68 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story