கோட்டூர் அருகே ‘கஜா’ புயலில் சாய்ந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


கோட்டூர் அருகே ‘கஜா’ புயலில் சாய்ந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 4:00 AM IST (Updated: 16 Dec 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே ‘கஜா’ புயலில் சாய்ந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் ‘கஜா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கோட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தென்னை, மா, பலா, மூங்கில், தேக்கு என பல ஆயிரம் மரங்கள் சாய்ந்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

புயல் தாக்கி ஒரு மாதமாகியும் கிராமங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். விவசாயிகளுக்கும் வருமானம் இல்லை.

சாய்ந்த டிரான்ஸ்பார்மர்

பாதிப்புக்கேற்ற நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கோட்டூர் அருகே நல்லூர் வடக்கு உள்ளிட்ட கிராமங்களில் சாய்ந்த மின்கம்பங்கள் அப்படியே கிடக்கின்றன. அறுந்த மின் கம்பிகளும் அப்புறப்படுத்தப்படவில்லை.

நல்லூர் வடக்கு கிராமத்தில் மன்னார்குடி- வேதபுரம் சாலையில் உள்ள ஒரு கூரை வீட்டு வாசலில் டிரான்ஸ்பார்மர் ஒன்று கஜா புயல் அன்று அங்கிருந்த மரம் மீது சாய்ந்தது. இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாததால், டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் அப்படியே உள்ளது.

கிராம மக்கள் அச்சம்

இந்த டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் குழந்தைகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

எனவே டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story