எச்.ராஜாவை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 35 பேர் கைது


எச்.ராஜாவை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 35 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 8:35 PM GMT)

எச்.ராஜாவை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, அவரை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், நேற்று காலை அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடத்திற்கு பதிலாக காமராஜர் வளைவில் கூடினர்.

இதனால் ஏமாற்றமடைந்த பெரம்பலூர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு, காமராஜர் வளைவுக்கு விரைந்து வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் சாலைக்கு ஓடி வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையில் வைத்திருந்த எச்.ராஜாவின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி, எச்.ராஜாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை கண்ட போலீசார் எச்.ராஜாவின் உருவப்படங் களை பிடுங்கினர். இதை யடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், கட்சியின் மாநில துணை செயலாளர் அண்ணாதுரை, வக்கீல் அணியின் மாநில துணை செயலாளர் சீனிவாசராவ், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர்மன்னன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதய குமார், நகர செயலாளர் சண் முகசுந்தரம் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து, துறைமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story