அரசு சார்பில் நிவாரண பொருட்களுடன் வழங்கப்பட்ட பால்பவுடர் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு


அரசு சார்பில் நிவாரண பொருட்களுடன் வழங்கப்பட்ட பால்பவுடர் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு
x
தினத்தந்தி 16 Dec 2018 4:30 AM IST (Updated: 16 Dec 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே அரசு சார்பில் நிவாரண பொருட்களுடன் வழங்கப்பட்ட பால்பவுடரை சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கரு.கீழத்தெரு ஊராட்சி மஞ்சுக்காடு கிராமத்தில் 37 குடும்பங்களுக்கு நேற்று தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் இருந்த பால்பவுடரை ஒரு சில குடும்பத்தினர் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட லட்சுமி, ரெங்கம்மாள், சின்னப்பொன்னு, ஆயியம்மான், கருப்பாயி, கவி, சுகந்தன், சிவசாமி, கோபிகா, திருக்குமரன் ஆகிய 10 பேரை சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பால்பவுடரை பயன்படுத்தவில்லை.

மேலும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்கள் சாப்பிட்ட பால்பவுடரை சோதனை செய்து பார்த்தப்போது, அந்த பாக்கெட்டில் காலாவதி தேதி இருக்கும் இடத்தில் வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரை கிழித்து பார்த்தப்போது, அதில் காலாவதி தேதி 6.12.2018 என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கறம்பக்குடி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண பொருட்கள் கடந்த சில நாட்களாக திருமண மண்டபங்களில் பூட்டி வைக்கப்பட்டு உள்ளன. சில நாட்களில் பயன்படுத்த வேண்டிய பால்பவுடர் போன்ற பொருட்களை காலாவதி தேதி முடிந்த பிறகு வழங்கப்படுவதால், மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் காலாவதியான பால்பவுடர் வழங்கியதை கண்டித்தும், அதிகாரிகள் யாரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களை பார்வையிடவரவில்லை எனவும், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பணியில் இல்லாததை கண்டித்தும் மஞ்சுக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு பூட்டு போட்டனர். பின்னர் அவர்கள் சீனிக்கடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட பால்பவுடரை கொண்டுவந்து, தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதை யடுத்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 பேரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story