18-ம் கால்வாய் தண்ணீர் மூலம் தேவாரம்-போடி பகுதியில் 46 கண்மாய்கள் நிரம்பின - விவசாயிகள் மகிழ்ச்சி


18-ம் கால்வாய் தண்ணீர் மூலம் தேவாரம்-போடி பகுதியில் 46 கண்மாய்கள் நிரம்பின - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 Dec 2018 4:30 AM IST (Updated: 16 Dec 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

18-ம் கால்வாய் தண்ணீர் மூலம் தேவாரம்-போடி பகுதியில் 46 கண்மாய்கள் நிரம்பின.

தேவாரம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு நேரடி பாசனம் மூலம் லோயர்கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மறைமுக பாசனம் மூலம் திராட்சை, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

தேவாரம் பகுதியில் போதிய அளவு நிலத்தடி நீர்மட்டம் இல்லாததால் அங்குள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி தரிசு நிலங்களாக காட்சி அளித்தது. இதையடுத்து இந்த பகுதிகளும் பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காக 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கூடலூர் முல்லைப்பெரியாற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு 41 கிலோ மீட்டர் தூரம், அதாவது தேவாரம் சுத்தகங்கை வரை 44 கண்மாய்கள் உள்ளன. இந்த நிலையில் தேவாரம் சுத்தகங்கை ஓடையில் இருந்து 18-ம் கால்வாய் கடந்த ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை, சிலமலை, ராசிங்காபுரம், தருமத்துபட்டி ஆகிய ஊர்களில் உள்ள 7 கண்மாய்கள் பயன்பெறும் வகையில் கால்வாய் சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதையொட்டி சோதனை ஓட்டத்திற்காக கடந்த மாதம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 18-ம் கால்வாய் மூலம் பயன் பெறும் 51 கண்மாய்களில் 46 கண்மாய்கள் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இதனிடையே 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பது நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டதால் மீதமுள்ள 5 கண்மாய்களும் நிரம்பாமல் உள்ளது.

கண்மாய்கள் நிரம்பியுள்ள பகுதியில், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் காய்கறிகள், சோளம், கம்பு, நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை, வாழை சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story