மருந்தியல் கல்லூரிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி: கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன்


மருந்தியல் கல்லூரிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி: கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:15 AM IST (Updated: 16 Dec 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

மருந்தியல் கல்லூரிகளுக்கான மாநில விளையாட்டு போட்டியில் கோவை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

திருச்சி,

பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து மருந்தியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியை திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் நடத்தினார்கள். இந்த போட்டியில் 21 மருந்தியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், கபடி உள்பட பல்வேறு வகையான தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

இதில் கோவை பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி அணி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் மருந்தியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டியன், முதல்வர் செந்தாமரை, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி கவலைப்படாமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு வழக்கு தொடருவது ஒரு பக்கம் இருந்தாலும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் எங்கள் பக்கம் இருக்கிறது என்பதை காட்ட வேண்டும். இது தமிழக அரசின் கடமை. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய அனைத்து அம்சங்களும் இடம் பெற வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகியும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு எந்த ஆறுதலும் கூறவில்லை. தமிழக அரசு கோரிய நிதியும் ஒதுக்கவில்லை. தற்போது 3 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகாவது பா.ஜ.க. கண்ணை திறக்க வேண்டும். கல்வி நிறுவனங் களில் பழைய வர்ணாசிரம தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் செயல்பாடுகள் நடக்கிறது. குறிப்பாக மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் இதுபோன்ற போக்கு நடப்பது கண்டிக்கத்தக்கது. இந்த நிலையை மாற்றாவிட்டால் ஒத்தக்கருத்துக்களை கூடிய அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story