பழனி அருகே 2 மணல் குவாரிகளுக்கு ‘சீல்’ - சப்-கலெக்டர் நடவடிக்கை


பழனி அருகே 2 மணல் குவாரிகளுக்கு ‘சீல்’ - சப்-கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2018 11:15 PM GMT (Updated: 15 Dec 2018 9:47 PM GMT)

பழனி அருகே, தரமற்ற முறையில் மணல் விற்ற 2 குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்து சப்-கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் செயல்படும் மணல் குவாரிகளில், கல்குவாரிகளில் கிடைக்கும் எம்.சாண்டை மணலாக மாற்றி கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்வதாக பழனி சப்-கலெக்டர் அருண்ராஜூக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களாக, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதியில் தரமற்ற மணலை விற்ற மணல் குவாரிகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூர், சுக்கமநாயக்கன்பட்டி பகுதிகளில் செயல்படும் 2 மணல் குவாரிகளிலும் தரமற்ற மணல் கட்டுமான பணிக்காக விற்பனை செய்யப்படுவதாக சப்- கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் நேற்று சப்-கலெக்டர் அருண்ராஜ் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது எம்.சாண்ட் மணலை தரமற்ற முறையில் மணலாக மாற்றி அந்த குவாரிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 குவாரிகளையும் பூட்டி ‘சீல்’ வைக்க வருவாய்த்துறையினருக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 2 குவாரிகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், குவாரி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கவும் அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் இதுகுறித்து சப்-கலெக்டர் கூறுகையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டிடங் களை கட்டும் பணியில் ஈடுபடுவோர் தரமான மணலை பயன்படுத்த வேண்டும். எம்.சாண்ட் கலக்கப்பட்ட மணலை யாராவது விற்பது தெரியவந்தால் உடனே எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.


Next Story