மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் சாவு: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி காங்கிரஸ் சார்பில் அறிவிப்பு
மாரம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியானார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரு,
இதுபற்றி அறிந்த மந்திரி சி.எஸ்.புட்டராஜு மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு ஆஸ்பத்திரி, சாம்ராஜ்நகர் மற்றும் கொள்ளேகாலில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி குமாரசாமி மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு பிரசாதம் சாப்பிட்டு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதியை அறிவித்து முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார்.இந்த நிலையில் நேற்று காலையில் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை பார்ப்பதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துருவநாராயண் எம்.பி., மந்திரிகள் புட்டரங்கசெட்டி, ஜமீன் அகமது கான், தர்மசேனா எம்.எல்.சி., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்சங்கர் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களையும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் பார்த்து ஆறுதல் கூறினர். பின்னர் பலியானவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தனர்.அதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். திட்டமிட்ட சதிச்செயல். கோவில் பிரசாதத்தில் விஷத்தை கலக்கக்கூடாது. மைசூருவில் மட்டும் கே.ஆர். ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பிரசாதம் சாப்பிட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 104 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களில் 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களின் உயிருக்கு டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். 48 மணி நேரம் கழித்துதான் அவர்களின் நிலைபற்றி முழுமையாக கூற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களைத் தவிர மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கே.ஆர். ஆஸ்பத்திரியில் மட்டும் இந்த நோயாளிகளுக்காக பிரத்யேகமாக 3 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 3 வார்டுகளுக்கும் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பக்தர்களை நாங்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினோம்.இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு சார்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர்களின் உயிருக்கு ஈடு ஆகாது. இருப்பினும் தற்போதைக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்புச்செலவை அரசு ஏற்க உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்று வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். அவர்களுடைய சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.இனிமேல் இதுபோன்ற சதிச்செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. அதை சகித்துக் கொள்ள முடியாது. இங்கு பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றும் அறியாத அப்பாவிகள்.
அப்பாவி மக்களைக் கொல்ல எப்படித்தான் அந்த கயவர்களுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. இனிமேல் எந்த கோவிலாக இருந்தாலும் பிரசாதம் வழங்குவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும்.பக்தர்களுக்கு வழங்குவதற்கு முன்பு கோவில் நிர்வாகிகள் மற்றும் அன்னதானம் வழங்குவோர் அவற்றை சுவைத்துப் பார்த்து அவற்றின் நிலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இதையடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரிய அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. இப்படி நடந்திருக்க கூடாது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தராமையாவிடம், தமிழில் முறையிட்ட பக்தர்
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆஸ்பத்திரியில், சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை பார்த்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் சித்தராமையாவிடம் நடந்த சம்பவம் குறித்து தமிழில் முறையிட்டார். அவர், ‘‘நாங்கள் 120 பேர் தமிழ்நாடு மேல்மருவத்தூரில் உள்ள ஓம்சக்தி கோவிலுக்கு 2 பஸ்களில் புறப்பட்டோம். செல்லும் வழியில் மாரம்மா அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு பிரசாதம் சாப்பிட்டோம். அதனால்தான் இப்படி ஒரு சோகத்தில் சிக்கிக் கொண்டோம். என்னுடன் வந்த பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்று கூறினார். அவர் கூறியதை அருகில் இருந்த ஒருவர் கன்னடத்தில் மொழிபெயர்த்து சித்தராமையாவிடம் தெரிவித்தார். அதையடுத்து அவரிடம் கன்னடத்தில் ஆறுதல் கூறிய சித்தராமையா, எதற்கும் கவலைப்படவும், பயப்படவும் தேவையில்லை, நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.
இறந்தவர்களின் பெயர் விவரம்
1.பாப்பண்ணா(வயது 70), எம்.ஜி.தொட்டி, சாம்ராஜ்நகர் மாவட்டம்.
2.ராசய்யா(58), தோமியார் பாளையா.
3.சக்திவேல்(30), தொட்ட ஒட்டரதொட்டி.
4.சாந்தராஜு(30), பிதரஹள்ளி கிராமம்.
5.கோபியம்மா(40), பிதரஹள்ளி கிராமம்.
6.அனிதா(14), சுலவாடி கிராமம்.
7.அண்ணயப்பா(45), மாதேஸ்வரன் மலை.
8.தொட்ட மாதய்யா(35), அலகதம்படி கிராமம்.
9.அனில்(12), பிதரஹள்ளி கிராமம்.
10.பிரீதன்(7), பிதரஹள்ளி கிராமம்.
11.கிருஷ்ணா நாயக்(40), மாரட்டஹள்ளி.
12.சிவு(30), பிதரஹள்ளி கிராமம்.