ராமநாதபுரம் நகரில் சேதமடைந்த சாலையில் முகமூடி அணிந்து வியாபாரிகள் திடீர் போராட்டம்


ராமநாதபுரம் நகரில் சேதமடைந்த சாலையில் முகமூடி அணிந்து வியாபாரிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2018 6:17 AM IST (Updated: 16 Dec 2018 6:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகரில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து கடும் தூசி பறந்து வருதால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் முகமூடி அணிந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் ரோமன் சர்ச் பகுதி முதல் அரசு ஆஸ்பத்திரி ரோடு, புதிய பஸ் நிலைய பகுதி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, பாரதிநகர் ரோடு ஆகியவை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. இந்த சாலையின் அவலம் காரணமாக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அவ்வப்போது மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதிக போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய சாலையில் மராமத்து பணியால் பயனில்லாமல் போனது.

புதிய சாலை அமைத்தால்தான் நிலைமை சரியாகும் நிலை உருவானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையால் இந்த சாலையின் நிலை மிகவும் மோசமானது. இதனால் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஜல்லிகற்களுடன் சிமெண்டு கலந்து சாலையில் போடப்பட்டு குழிகள் மூடப்பட்டன. இந்த சிமெண்டு கலவையும் போக்குவரத்து பயன்பாடு காரணமாக தாக்குப்பிடிக்காமல் போனது.

இதனால் கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் உள்ள சாலை சிமெண்டு தூசி மற்றும் மணல் தூசி போன்றவற்றால் கடும் மாசு நிறைந்து காணப்படுகிறது. நாள்தோறும் சென்றுவரும் அதிகஅளவிலான வாகனங்களால் இந்த சாலை முழுவதும் கடும் தூசு பறந்து செல்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமல்லாது அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர்.

இந்த சாலையை ரூ.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்க அனுமதி பெறப்பட்டிருந்தாலும் பணிகள் தொடங்கப்படாததால் மக்கள் அவதி தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடும் தூசு மற்றும் புழுதிக்காற்று காரணமாக ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் நேற்று காலை திடீரென தங்களின் முகத்தில் முகமூடி அணிந்து ரோட்டில் நின்று போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 மாதங்களாக மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் இந்த சாலையால் அலர்ஜி, இருமல், தும்மல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பும், கண் எரிச்சல் உள்ளிட்ட தொந்தரவுகளுக்கு உள்ளாகி இருப்பதாலும் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story