பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி கருப்பு கொடி போராட்டம்; சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அறிவிப்பு


பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி கருப்பு கொடி போராட்டம்; சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 12:59 AM GMT (Updated: 16 Dec 2018 12:59 AM GMT)

பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு முழு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரியும் பட்டாசு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்த போவதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

விருதுநகர்,

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தேவா நிருபர்களிடம் கூறியதாவது:–

பட்டாசு ஆலைகள் கடந்த 1 மாதமாக மூடப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்ட பொருளாதார நிலையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. மத்திய அரசு பசுமை பட்டாசு என்ற காரணத்தை கூறி பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 18–ந்தேதி பட்டாசுஆலை தொழிலாளர்கள் மத்திய அரசு சுற்றுச்சூழல் விதியிலிருந்து முழு விலக்கு அளிக்க கோரியும் மாநில அரசு இது தொடர்பான வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரியும் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவதுடன் அந்தந்த கிராமங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மாவட்டம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதனை தொடர்ந்து இம்மாதம் 21–ந்தேதி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆகியோருடன் இணைந்து பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுப்பதுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


Next Story