விபத்து, குற்ற வழக்குகளில் நிவாரணம் பெற 6 மாதங்களுக்கு ஒருமுறை வழிகாட்டுதல் முகாம் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்


விபத்து, குற்ற வழக்குகளில் நிவாரணம் பெற 6 மாதங்களுக்கு ஒருமுறை வழிகாட்டுதல் முகாம் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 5:34 PM GMT)

விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணம் பெற 6 மாதங்களுக்கு ஒருமுறை வழிகாட்டுதல் முகாம் நடத்தப்படும் என போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம், கொடுங்காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இதுபோன்று 100 வழக்குகள் பதிவானால் 10 பேர் மட்டுமே, அதாவது 10 சதவீதம் பேர் நிவாரணம் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

எனவே பொதுமக்கள் இடையே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகையை பெற பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழிகாட்டுவது ஆகும்.

இந்த நிவாரண தொகையை பெற நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாராவது இந்த தொகையை சீக்கிரம் பெற்று தருகிறேன் என கூறி பணம் கேட்டால் அவர்களை நம்ப வேண்டாம். குற்ற வழக்குகளை பொறுத்த வரையில் நிவாரணத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்ணயம் செய்யும். விபத்தில் நீங்கள் பெறும் இன்சூரன்சு தொகைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் நடந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் நிவாரணம் பெறுவது எப்படி ? என்பது குறித்து தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் சொல்லி வருகின்றனர். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை வரவழைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்குவது இதுதான் முதல் முறையாகும். நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூரில் நடந்த இந்த முகாம்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்து உள்ளனர். இதுபோன்ற வழிகாட்டுதல் முகாம் இனி 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

இதேபோல் நமது மாவட்டத்தில் இந்த ஆண்டு 36 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளன. இவற்றில் பாதிக்கப்பட்ட நபர்களில் சிலருக்கு வாரிசு இல்லை. மீதமுள்ளவர்களில் யார் சரியான வாரிசு என்பதை அறிந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் வழக்கின் தன்மை குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். மக்களை நோக்கி அரசு என்ற திட்டத்தின் அடிப்படையில் இதை செய்து வருகிறோம். நாமக்கல் கிளை சிறையில் விசாரணை கைதி சிவக்குமார் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளோம். எங்களின் முதல்கட்ட விசாரணையில் அவர் நாடகமாடி இருப்பது தெரியவந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story