மாதவரத்தில் கள்ள நோட்டு அச்சடித்த பெண் உள்பட 3 பேர் கைது


மாதவரத்தில் கள்ள நோட்டு அச்சடித்த பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை மூலக்கடையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்க வந்தார். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவரிடம் புதிய ரூ.500 நோட்டை கொடுத்து மதுபாட்டில் வாங்கினார். அது கள்ள நோட்டு என புரிந்து கொண்ட சுதாகர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். உடனே அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார்.

அவரை விரட்டி சென்றபோது மாதவரம் கே.கே.நகர் அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்து அவரை மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் மாதவரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சுப்பிரமணி (32) என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எஸ்.ஏ.காலனி 5-வது தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (48), ரசீயா (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.19 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளையும், கலர் ஜெராக்ஸ் எந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story