பெரம்பலூர் மாவட்டத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை


பெரம்பலூர் மாவட்டத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 8:06 PM GMT)

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

தமிழ் மாதங்களில் பக்தி மாதம் என்ற பெருமைக்குரியது மார்கழி மாதம். இந்த மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தப்படுவது இல்லை என்றாலும் கோவில்களில் அதிக அளவில் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மார்கழியில் வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி விழாவாக பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வைகுண்ட பதவியை அடையலாம் என்பது பக்தர்களின் ஐதீகம். இத்தகைய சிறப்புக்குரிய மார்கழி மாதம் நேற்று பிறந்தது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வைணவ தலங்களில் மட்டும் இன்றி சிவன், விநாயகர், முருகன் மற்றும் அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவையும், குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குளிர்ந்த நீரில் குளித்து கோவில்களுக்கு சென்று பஜனை பாடல்கள் படித்து இறைவனை வழிபட்டனர். நேற்று அதிகாலையிலேயே பெண்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து வண்ணக்கோலங்கள் போட்டு விளக்கேற்றி வழிபட்டனர். மார்கழி மாத பிறப்பையொட்டி பெரம்பலூர் மதனகோபால சுவாமி, பிரம்மபுரீஸ்வரர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அதிகாலையிலேயே பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. 

Next Story